×

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடக்கூடிய யாராக இருந்தாலும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையில் தொடர்ந்து ஈடுபடக்கூடிய யாராக இருந்தாலும், அவர்கள் மேல் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கப்பட்டிருப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ நிகழ்ச்சி நடந்தது. விழாவில், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

காவல் துறை சார்பில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற அக்கறை மிகுந்த நோக்கத்தோடு கடந்த ஆண்டு இந்த திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. போதைப்பொருள் விற்பனையில் தொடர்ந்து ஈடுபடக்கூடிய யாராக இருந்தாலும், அவர்கள் மேல் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. போதைப்பொருள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்த, என் தலைமையில் அடிக்கடி ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவர்கள் நிறைய பேர் இங்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் என்ன தான் பணம் சம்பாதித்தாலும் நல்ல உடல்நிலை இருந்தால்தான் உங்களால் தொடர்ந்து உழைக்கவும் முடியும், சம்பாதித்த பணத்தை வைத்து சந்தோஷமாக இருக்கவும் முடியும். இதுதான் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரையாக வழங்க வேண்டும். போதை ஒழிப்பை பொறுத்தவரை, தடுப்பு நடவடிக்கைகளும், விழிப்புணர்வு பிரசாரமும் ஒரு சேர நடக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏ தாயகம் கவி, உள்துறை செயலாளர் அமுதா, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், காவல்துறை கூடுதல் இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால், காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள், மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரூ.18 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்
ஆகஸ்ட் 11, 2022 முதல், 154 குற்றவாளிகளுக்கு எதிராக நிதி தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.18 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள 45 அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு 16 ஆயிரம் கிலோ கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓராண்டில், என்டிபிஎஸ் சட்டவழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5,184 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறது என்று முதல்வர் கூறினார்.

* அமலாக்க பணியகம் குற்றப்புலனாய்வு துறை புதிய பிரிவு
போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவை இணைத்து ‘அமலாக்கப் பணியகம்-குற்றப் புலனாய்வு துறை’ என்ற புதிய பிரிவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

The post போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடக்கூடிய யாராக இருந்தாலும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பத்மநாபபுரம் தொகுதி முன்னாள்...